சிறு வயது சிந்தனைகள்-II
***** REPUBLISHED *****
என்னவோ தெரியவில்லை! நம்மில் பலருக்கு பழைய நினைவுகளை அசை போடுவதும், அதனால் ஏற்படும் அலாதியான மனமகிழ்ச்சியும் அடிக்கடி நிகழ்பவையாக உள்ளன. சகோதரி பத்மினி தன் தங்கைக்கு எழுதும் தொடர் கடிதங்களில், தன் சிறுவயது சம்பவங்களை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். நமது Bloggers-இல் பலர், தங்கள் வலைப்பதிவுகளில், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், "அந்த நாளும் மறுபடி வாராதோ?" என்ற தொனியில் எழுதியிருக்கிறார்கள் என்றே கூறுவேன்.
நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் 'ப்ருந்தாரண்ய ஷேத்ரம்' என்றழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் தான். தந்தையார் என் சிறு வயதிலேயே தவறி விட்டதால், என் அம்மா வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது நான் 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கிறித்துவப் பள்ளியின் (Montessori) தலைமையாசிரியரான, மிகுந்த கனிவும் இரக்க குணமும் கொண்ட Johannes அம்மையார் என் அம்மாவை ஆசிரியை பணிக்கு வருமாறு கூறினார்கள்.
என் தாய்வழிப் பாட்டனார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என்பதாலோ என்னவோ, எனக்கு படிப்பில் ஈடுபாடு இயற்கையாகவே அமைந்திருந்தது. சிலேட்டில் 'a b c d' சரியாக எழுத வரவில்லையென பலமுறை அழுதிருப்பதாக, என் முதல் வகுப்பு ஆசிரியை, காலஞ்சென்ற திருமதி ராஜி, பிற்காலத்தில் கூறி சிரித்திருக்கிறார்கள்! நான் கல்வியார்வத்துடனும், அமைதியான குணமுடனும் காணப்பட்டதால், Johannes அவர்களுக்கு என் மேல் தனிப்பட்ட பிரியம் இருந்தது. கருணையும் கண்டிப்பும் ஒரு சேர அமைந்த அவரிடம் எனக்குப் பிடித்தவை அவரின் முத்து முத்தான கையெழுத்தும், ஆங்கில இலக்கண அறிவும் தான். என் நினைவில் என்றும் வாழும், என் முதல் ஆசான் அவரே ஆவார்.
நான் (ஆறாம் வகுப்பிலிருந்து) இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்த காலத்திலும், அவரை மரியாதை நிமித்தம் அவ்வப்போது பார்க்கச் செல்வேன். ஒவ்வொரு முறையும் தவறாமல் என் படிப்பைப் பற்றி விசாரிப்பார். அவர் பள்ளிக்கு வரும் பெற்றோர்களிடம் நான் அவர் மாணவன் என்று பெருமிதத்துடன் கூறுவார். தேர்வு சமயங்களில், கிறித்துவ முறைப்படி என்னை மண்டியிட வைத்து ஆசிர்வதித்துத் தான் அனுப்பி வைப்பார்!!! அவரின் அந்த ஆசிர்வாதம் எனக்கு வெகுவாக உதவியது என்று திடமாக நம்பினேன். 1981-இல் அவர் எனக்களித்த நல்லொழுக்கச் சான்றிதழை ஒரு பொக்கிஷம் போல் இன்று வரை பாதுகாத்து வருகிறேன்.

ஒன்று மட்டும் நிச்சயம். அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. Johannes அவர்கள் இறக்கும் தறுவாயில் என்னை பார்க்க விரும்பினார். நான் செல்வதற்குள், அவர் உயிர் பிரிந்தது என்னுடைய துர்பாக்கியம்.
என் பெண்ணும் நான் பாடம் பயின்ற Montessori பள்ளியில் தான் தன் கல்வியைத் தொடங்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை அப்போது தலைமையாசிரியராக இருந்த Johannes அவர்களின் மகளிடம் கூறியபோது, அவர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். சிறிது காலம் அங்கு படித்த என் மகள், இப்போது வேறு பள்ளியில் கல்வி கற்கிறாள். என் இரண்டாவது பெண்ணுக்குத் தான் அந்த கொடுப்பினை இல்லை போலும்!
Johannes அவர்களின் மகளும் சில வருடங்களுக்கு முன் இறந்து போனதால், பள்ளி மூடப்பட்டு, அக்கட்டிடமும் இடிக்கப்பட்டு, அங்கே ஒரு காபிப்பொடி கடையும், ஒரு சிறு Super Market-உம் தோன்றி விட்டன! என் பள்ளி இருந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், நெஞ்சு சற்று கனத்துத் தான் போகிறது! நான் படித்த பள்ளி, இலைகளும் மலர்களும் பழங்களும் கூடிய உயிரோட்டமிக்க ஒரு அழகான சிறு மரம் போன்றதென்றால், தற்போதைய கட்டிடம் கிளைகள் தவிர வேறெதுவும் இல்லாத உயிரற்ற ஒரு சூனிய மரமாகவே எனக்கு காட்சியளிக்கிறது. பள்ளி இருந்த காலத்தில், அதன் முகப்பையாவது ஒரு புகைப்படமாக எடுத்து வைத்திருக்கலாம் என்று இப்போது நினைத்து என்ன பயன்? வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் கூட, சில மாற்றங்களை மனதளவில் நம்மால் ஏற்க முடிவதில்லை!
என்றென்றும் அன்புடன்
பாலா
14 மறுமொழிகள்:
அன்புக்குரிய பாலா,
அருமையான தொடக்கம், உள்வாங்கி உணர்ச்சிவசத்துடன் வாசிக்கவைக்கும் நடை.
//
அக்காலத்தில் நான் சந்தித்த, தங்கள் பணியை சமூகத் தொண்டாக கருதிய, பள்ளி ஆசிரியர்களைப் போல், தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் இல்லை என்றே தோன்றுகிறது.//
சத்தியமான உண்மை. இப்போது அதுபோன்ற ஆசிரியர்களைத்தேட வேண்டியிருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
சிங்கை அன்பு,
என் "சிறு வயது சிந்தனைகள் - II" படித்ததற்கும், அது பற்றிய தங்கள் விமர்சனத்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி! தங்கள் பின்னூட்டத்தை பார்த்தவுடன் உண்மையான மகிழ்ச்சி ஏற்பட்டது. தங்களைப் போன்றவர்கள் நான் எழுதவதைப் படிக்கிறார்கள், ரசிக்கிறார்கள் என்பதே நான் இன்னும் நிறைவாகவும் நிறையவும் எழுத வேண்டும் என்ற உத்வேகத்தையும், ஆர்வத்தையும் எனக்கு அதிகப்படுத்துகிறது! "சிறு வயது சிந்தனைகள் - Part III" சமயம் கிடைக்கும்போது முன்னதை விட சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன்.
ராஜாவின் "குடைக்குள் மழை" பற்றிய விமர்சனத்துக்கு எழில் அவர்களின் பின்னூட்டத்திற்கு தங்கள் பதில் சுவாரசியமாக இருந்தது. உங்கள் Blog-இல் பதித்திருக்கும் "கலாச்சார சீரழிவு" பற்றிய தங்கள் கருத்துக்களுடன் எனக்கும் உடன்பாடே.
என்றென்றும் அன்புடன்
பாலா
#///அதன் முகப்பையாவது ஒரு புகைப்படமாக எடுத்து வைத்திருக்கலாம் என்று இப்போது நினைத்து என்ன பயன்?///'
naanum ippadi adikkadi ninaippen.
#/// வாழ்வில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றாலும் கூட, சில மாற்றங்களை மனதளவில் நம்மால் ஏற்க முடிவதில்லை!///#
unmai Bala
பாலா,
'yesterdays were always sweeter' என்பார்கள்; உண்மைதான்.
"தற்காலத்து அன்யோன்யமற்ற அவசர உலகில் வாழும் ஆசிரியர்கள் " இதில் உண்மையும் இருக்கிறது; மாணவர்களிடமும், ஆசிரியர்களை அவர்கள் அணுகும் முறையிலும் பெரும் வேற்றுமையை என் அனுபவத்தில் கண்டுள்ளேன். எண்பதுகளில் இந்த மாற்றம்கண்டு, அனுபவித்து அதற்கேற்றாற்போல் நானும் மாறினேன் என்பதும் உண்மை.
பாலா
ஆசிரியர்கள் மட்டும் இல்லை மாணவர்களும் மாறி போய்விட்டார்கள்.ஆசிரியருக்கு உரிய மரியாதை தருவதில்லை. எதிலும் விலக்குகள் உண்டு.
Dharumi, தேன் துளி,
karuththukkaLukku nanRi !!!
Dear CT,
Thanks for finding time to read and comment.
enRenRum anbudan
BALA
nallArukku, bala.
Bala,
i was also from same school,
such a nice place
i was there only in my KG's
my teacher was lakshmi madam.
those days are golden days
your article gave me a nostalgia of my kindergarten days.
best wishes
raghav
london
சென்னை திருவல்லிக்கேணியில் பிறக்காமல் இருந்தாலும் அங்கு முக்கியமாக எல்லா சந்துக்களிலும், தெருக்களிலும் சுற்றிய அனுபவம் இருக்கிறது. உங்களின் இளமைக்கால நினைவுகளை அழகாக படைத்துள்ளீர்கள். ஒரு நல்ல குரு உங்களுக்கு கிடைத்ததற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
அந்தக் கட்டிடம் இப்பொழுது இல்லை என்றும் அதை ஒரு புகைப்படம் கூட எடுத்துவைக்கவில்லை என்று நீங்கள் எழுதும்போதும் உங்களின் ஆழ்ந்த மனவருத்தம் தெரிகிறது.
நல்லப் படைப்பு.
நன்றி.
ராகவ், மஞ்சூர் ராஜா,
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. இது ஒரு மீள் பதிவு.
எ.அ.பாலா
Anony,
Thanks.
Wow..Ennoda school memories ellam kilappi vittuteenga..Very Nice!
Thangs,
Thanks !
//Wow..Ennoda school memories ellam kilappi vittuteenga..
//
That was the intention :)
Post a Comment